(23/04 /1935 – 27/06/2009)
ஈழத்தின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரும் நாடக ஆசிரியருமான கலாநிதி இ.முருகையன், இயற்கை எய்தினார். அவரது பிரிவு ஈழத் தமிழ் அரங்கில் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு.
கலாநிதி இ.முருகையன் நாடறிந்த மூத்த கவிஞர், நாடக எழுத்துருப் படைப்பாளி.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவபிரகாச வித்தியாசாலை, சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளில் கற்றார்.
இரண்டாம் நிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர். 1956ம் ஆண்டு Bsc பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், கடந்த காலங்களில் ஆசிரியராக, அரச கரும மொழித்திணைக்கழத்தில் மொழி பெயர்ப்பாளராக, ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக, கல்வித் திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளராக, பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஈழத்துப் பிரபலமான நாடகக்காரர் சிவானந்தனின் சகோதரர் இவர்.
1965ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பிள்ளைகள்.
கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றி நாடக ஆசிரியராகவும் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். அரசகரும மொழித் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை பெரும் கவனத்திற்குரியது.
அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் கொண்டவை. சமூகப் பயனுடையவை.
அவரது மறைவையொட்டி அஞ்சலிகளையும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் செய்திறன் அரங்க இயக்கமும் கூத்தரங்கமும் தெரிவித்துக் கொள்கின்றன.
“அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் தமிழ் அறிவுத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்” என்று தேசிய கலை இலக்கியப் பேரவை தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
கவிஞர் முருகையன் கூத்தரங்கம் இதழுக்கு வழங்கிய செவ்வியை இங்கு காணலாம்.



